செய்திகள்

டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் - கே.சி.வீரமணி சர்ச்சை பேச்சு

Published On 2018-08-26 10:45 IST   |   Update On 2018-08-26 11:25:00 IST
டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Tasmac #Teacher

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் மதுபானம் குடித்து விட்டு போதையில் தள்ளாடிய படி வந்து ரகளையில் ஈடுபட்டார்.

அவரை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்ற முயன்றனர். போதையில் இருந்த முதியவரை விடுமாறு போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியபோது ‘‘டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது.

 


அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும்’’ என்றார்.

அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களிடம் முதலில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு சலசலப்பை உண்டாக்கியது.

ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் மதுகுடிக்க ஊக்குவிப்பதை போல் அமைச்சர் வீரமணி பேச்சு அமைந்திருந்தாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

டாஸ்மாக் வருமானத்தில் சம்பளமா? என்று நினைக்கும் போது வேதனையளிப்பதாக ஆசிரியர்களும், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சு விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

Tags:    

Similar News