செய்திகள்

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்- ஐகோர்ட்டு கிளை உத்தரவு

Published On 2018-08-23 11:40 GMT   |   Update On 2018-08-23 11:40 GMT
தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. #TNGovernment #highCourt
தஞ்சாவூர்:

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதை தவிர்ப்பதற்காக 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைச முத்திரம் என்ற இடத்தில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பி அங்கு கல்லூரி இயங்கி வருகிறது.

தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் துணையுடன் நிலத்தை வளைத்து போட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் சமூக ஆர்வலர்கள் பலர் , ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாமல் இந்த விவகாரம் கிடப்பிலேயே இருந்து வந்தது.

இதற்கிடையே இந்த விவகாரம் யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அரசு அதிகாரிகளின் துணையுடன் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதை உடனடியாக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐகோர்ட்டில் சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலத்துக்கான தொகையை அரசுக்கு வழங்கத் தயார் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. தீர்ப்பில் நீதிபதி நூட்டி ராமமோகனராவ், தமிழக அரசு, இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திடம் ஓப்படைக்கலாம். என்று உத்தரவிட்டார்.

ஆனால் நீதிபதி சுப்பிரமணியம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு பணம் பெற்று விட்டு ஆக்கிரமித்தவரிடமே ஒப்படைப்பது என்பது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இரு மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கை 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். இந்நிலையில், ஐகோர்ட்டு கிளையில் வைத்து, நீதிபதி கார்த்திகேயன் நேற்று பிறப்பித்த உத்தரவில், நீதிபதி சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். அதாவது, தஞ்சை சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58.17 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு உடனடியாக கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தற்போது ஆக்கிரமிப்பு நில பிரச்சினை குறித்த தீர்ப்பால் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #TNGovernment #highCourt
Tags:    

Similar News