செய்திகள்
கோப்புப்படம்

செங்கோட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் 150 எக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிப்பு

Published On 2018-08-23 10:26 GMT   |   Update On 2018-08-23 10:26 GMT
செங்கோட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, தெற்குமேடு, பகவதிபுரம், கற்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கார் பருவ நெல் பயிர்களில் அண்மையில் பெய்த அதிகப்படியான மழை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக நெற்கதிர்கள் வெளிவரும் தருவாயில் மகரந்த சேர்க்கை இல்லாமல் நெல் மணிகள் பதராகி மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் செந்திவேல் முருகன் வழிகாட்டுதலின்படி, அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ஆறுமுகச்சாமி, மண்ணியல் பேராசிரியர் ஜோதிமணி, உழவியல் உதவி பேராசிரியர் ஸ்ரீரெங்கசாமி, நோயியல் உதவி பேராசிரியர் ராம்ஜெகதீஷ், நெல்லை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியம், வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராசா, துணை வேளாண்மை அலுலவர் ஷேக்முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் ஜானகிராமன் ஆகியோர் கொண்ட குழு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நெல் பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அண்மையில் தொடர்ந்து பெய்த அதிகப்படியான மழை, அதிக வேகமான காற்றினால் நெற் கதிர்கள் வெளிவந்து பால் பிடிக்கும் தருவாயில் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் மணிகள் அனைத்தும் பதராகி காய்ந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 150 எக்டேர் பரப்பில் விவசாயிகளுக்கு 50 சதவீதத்துக்கும் மேலாக மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இப்பகுதியில் நெல் சாகுபடி செய்து நெற் கதிர்கள் பதராகி பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகள் விவரம் சேகரித்து கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பி உரிய நிவாரண தொகை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும் என்று வேளாண்மைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News