செய்திகள்

வாஜ்பாய் அஸ்தி இன்று புதுவை வந்தது - ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி

Published On 2018-08-23 10:13 GMT   |   Update On 2018-08-23 10:13 GMT
வாஜ்பாய் அஸ்தி அலங்கரிக்கப்பட்ட ரதம் மூலம் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது.
புதுச்சேரி:

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் டெல்லி யமுனை ஆற்றங்கரையில் கடந்த 17-ந் தேதி தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது அஸ்தி ஹரித்துவார் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

பின்னர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித நதி மற்றும் கடலில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து கலசங்கள் மூலம் அஸ்தி கொண்டு வரப்பட்டு நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், காரைக்காலை சேர்ந்த செயலாளர் அருள்முருகன் ஆகியோர் டெல்லி சென்று வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை பெற்று விமானம் மூலம் புதுவை வந்தனர். ஒரு அஸ்தி கலசத்தை செயலாளர் அருள்முருகன் காரைக்கால் கொண்டு சென்றார்.

புதுவை விமான நிலையத்தில் அஸ்தி கலசத்துக்கு சங்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம் மற்றும் செல்வம், பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சோம சுந்தரம், முன்னாள் தலைவர் தாமோதர், இளைஞர் அணி மவுலித்தேவன் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி பெற்று கொண்டனர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதம் மூலம் அஸ்தி புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது.

முதல் கட்டமாக உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டை, உழவர் சந்தை, சிவாஜி சிலை, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, இந்திராநகர், ஜிப்மர் நுழைவு வாயில், ஊசுடு குரும்பாபேட், உழவர்கரை, மூலகுளம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை கதிர்காமம் தொகுதி இந்திரா காந்தி சிலை, அரியாங்குப்பம் கடை வீதி, தவளக்குப்பம் சந்திப்பு, பாகூர் கோவில் திடல், ஏம்பலம் தொகுதி சேலியமேடு, கடை வீதி, நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்ட ரதம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லித்தோப்பு லெனின் வீதி காமராஜர் சிலை அருகே தொடங்கி நகர பகுதி முழுவதும் சென்று மண்ணாடிப்பட்டு, வில்லியனூர் பகுதிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக அங்கு கொண்டு செல்லப்படுகிறது.

முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி சிலையை அடைகிறது. அங்கு கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாரா யணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்க் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், சமூக அமைப்பு நிர்வாகிகள் அஸ்திக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அதன் பிறகு பகல் 12 மணிக்கு தலைமை செயலகம் எதிரே கடலில் அஸ்தி கரைக்கப்படுகிறது.

Tags:    

Similar News