செய்திகள்

கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மறியல்

Published On 2018-08-22 17:15 GMT   |   Update On 2018-08-22 17:15 GMT
பேராவூரணி அருகே கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.

பேராவூரணி:

பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு கடைவீதியில் சொர்ணக்காடு, வீரக்குடி மணக்காடு, ரெட்டவயல் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடைமடை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

விவசாய சங்க பொறுப்பாளர் கருப்பையன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்வேலுச்சாமி, ராஜாமுகமது, நெல்லியடிக் காடு சேகர், மணக்காடு ஜெகநாதன், கருப்பையா, ரவிச்சந்திரன், ரெட்டவயல் கண்ணன், சின்ன ரெட்டவயல் ராஜேஷ் கண்ணா, கீழ மணக்காடு, கோவிந்தராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் எல்.பாஸ்கரன், பட்டுக்கோட்டை போலீஸ் உதவி சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீரக்குடி, சொர்ணக்காடு கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து, முழு கொள்ளளவான 50 கன அடி தண்ணீர் முறை வைக்காமல் வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News