செய்திகள்

29-ந் தேதி நடக்க இருந்த சிறுமியின் திருமணம் நிறுத்தம்

Published On 2018-08-22 12:02 GMT   |   Update On 2018-08-22 12:02 GMT
புதுவை அருகே வருகிற 29-ந்தேதி நடக்க இருந்த 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சேதராப்பட்டு:

புதுவை அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை அடுத்துள்ளது நல்லாவூர் கிராமம். இது, தமிழக பகுதியை சேர்ந்ததாகும்.

இந்த ஊரை சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 29-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

29-ந் தேதி திருவந்திபுரம் கோவிலில் திருமணமும், மறுநாள் திண்டிவனத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

இதுபற்றிய தகவல் திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தெரிய வந்தது. அவர், நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

அந்த பெண்ணுக்கு இன்னும் திருமண வயதான 18 வயது பூர்த்தியாகவில்லை என்று தெரிய வந்தது. எனவே, இதுபற்றி அவர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வானூர் தாசில்தார் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில், அந்த பெண்ணுக்கு திருமண வயது நிரம்பவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதியானது.

எனவே, பெண்ணின் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். திருமணத்தை நிறுத்த வேண்டும். அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதையடுத்து 29-ந் தேதி நடக்க இருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் வீட்டார் எழுதி கொடுத்தனர். இதன் மூலம் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News