செய்திகள்

மாநகராட்சி பள்ளியில் தினமும் 120 மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் ஆசிரியர்

Published On 2018-08-21 05:16 GMT   |   Update On 2018-08-21 05:16 GMT
கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 120 மாணவர்களுக்கு இலவசமாக இட்லி மற்றும் பொங்கல் ஆகிய உணவுகளை ஆசிரியர் இளமாறன் தினமும் வழங்கி வருகிறார். #Corporationschool #Teacher

சென்னை:

கொடுங்கையூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தமிழ் ஆசிரியராக இளமாறன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் தினமும் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை ஆசிரியர் இளமாறன் கவனித்தார்.

ஏழ்மையால் அவர்களுக்கு காலை உணவு கூட சரியாக சாப்பிட முடியவில்லை என்பதை அறிந்த அவர் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்தார்.

 


இதுகுறித்து தலைமை ஆசிரியர் முனிராமையாவிடம் தெரிவித்தார். இதற்கு தலைமை ஆசிரியரும் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் யார் என்று கணக்கெடுக்கப்பட்டது. இதில் 120 மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவது தெரிய வந்தது.

அந்த மாணவர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் ஆகிய உணவுகளை ஆசிரியர் இளமாறன் தினமும் வழங்கி வருகிறார்.

பள்ளியில் காலை இறை வழிபாட்டின்போது மாணவர்கள் பலர் சோர்வாக இருப்பதையும், மயங்கி விழுந்ததையும் பார்த்து அதுபற்றி விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தனர்.

 


மிகவும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த அவர்களுக்கு காலை உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி அம்மா உணவகத்தில் ரூ.200க்கு இட்லி மற்றும் பொங்கல் வாங்குவேன். அதை பள்ளிக்கு எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுப்பேன். இதனால் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்களது பிறந்த நாள், திருமண நாளில் அவர்களது செலவில் காலை உணவை இலவசமாக வழங்குகிறார்கள். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களும் உதவி செய்து வருகிறார்கள்.

காலை உணவுக்காக மாதம் ரூ.5000 வரை செலவிட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத்தேர்வில் இப்பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது.

Tags:    

Similar News