செய்திகள்

காரியாபட்டி வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

Published On 2018-08-07 09:55 GMT   |   Update On 2018-08-07 09:55 GMT
காரியாபட்டி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதை நிலக்கடலை வழங்கக் கோரி தோப்பூர் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

காரியாபட்டி:

தமிழ்நாட்டில் விவசாயத்தில் வளர்ந்துவரும் மாவட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களை விவசாய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் மத்திய அரசு தேர்வு செய்தது.

இதனடிப்படையில் காரியாபட்டி வட்டத்தில் வழுக்கலொட்டி, தோனு கால்,கழுவனச்சேரி, தோப்பூர், முடுக்கன்குளம், மறைக்குளம் ஆகிய கிராமங்களை தேர்வு செய்து மத்திய அரசு மூலம் தேசிய விதை உற்பத்தி நிறுவனத்திலிருந்து தாரணி என்ற விதை நிலக்கடலைகளை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காரியாபட்டி வேளாண்மை அலுவலகத்தில் தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து எங்களுக்கும் விதை நிலக் கடலை கொடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் காரியாபட்டி வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தவசிமுத்து பேசினார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

தோப்பூர் கிராமத்தில் விவசாயிகள் நல வாழ்வு இயக்கத்தின் சார்பில் கிராம விவசாயிகளுக்கு 468 பேருக்கு நிலக்கடலை வந்துள்ளது. இந்த நிலக்கடலையை அந்த கிராமத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அப்போது அதிகாரிகளுடன் பிரச்சினை செய்ததால் வேளாண்மை அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வாங்கிய நபர்களே மீண்டும் வந்து விண்ணப்பம் கொடுப்பதால் தான் இதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

நிலக்கடலை வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் செய்யும் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதில் யார் வாங்கி இருக்கிறார்களோ அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டு வாங்காத விவசாயிகளுக்கு நிலக்கடலை விதை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமைபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News