செய்திகள்

சமூக வலைத்தளங்களை பார்த்து, வீட்டில் சுகப்பிரசவத்திற்கு முயன்ற ஆசிரியை பலி

Published On 2018-07-25 22:03 GMT   |   Update On 2018-07-25 22:03 GMT
சமூக வலைத்தளங்களை பார்த்து வீட்டில் வைத்து சுகப்பிரசவத்திற்கு முயன்ற ஆசிரியை இறந்தார். குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #SocialNetwork
திருப்பூர்:

திருப்பூர் புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரவீன் தனது மனைவியுடன், கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து சமூகவலைத்தளத்தில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். உடனே கிருத்திகாவையும், குழந்தையையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அதிகாரி திருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில் கிருத்திகாவிற்கு வீட்டில் பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் இலவசமாக பார்க்கும்போது அங்குபோகாமல் சமூக வலைத்தளம் மூலம் பிரசவம் பார்க்க காரணம் என்ன? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 
Tags:    

Similar News