செய்திகள்
பெரியபாளையம் கோவில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பெரியபாளையம் கோவில் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2018-07-21 06:42 GMT   |   Update On 2018-07-21 06:42 GMT
பெரியபாளையம் கோவிலில் நடைபாதையை அகலப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலின் தெற்கு வாசல் நடைபாதை வழி 20 அடி அகலம் உள்ளது.

இதை பக்தர்களின் வசதிக்காக 30 அடி நடைபாதை அகலப்படுத்துமாறு திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதிய எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் இந்த பணியை நேற்று மாலை செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், தெற்கு திசையில் உள்ள கடைகளை நடைபாதையில் இருந்து பத்து அடிக்கு மேற்கு திசைக்கு தள்ளி வைத்து நடைபாதை வழியை அகலப்படுத்தினர். சாலையில் இருந்த பள்ளத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மண் கொட்டி நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது, கோவிலின் அறங்காவலர் லோகமித்ரா மற்றும் கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் இந்த பணியை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தெற்கு வாசல் வழி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில் சார்பில் நடை பாதை அமைத்தோம். இந்த நிலம் எங்களுக்கு உபயோகப்படுத்தி கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து உரிய தீர்வு காணும் வரையில் தங்களது அறப்போராட்டம் தொடரும் என்று அப்பகுதியில் அமர்ந்திருந்தனர்.

தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், நிலம் சம்பந்தமாக ஆவணங்கள் இருந்தால் அதனை கொண்டு வந்து காண்பிக்குமாறு கூறினர். இந்த பிரச்சனை தொடர்பாக வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறிவிட்டு சென்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். #PeriyapalayamTemple
Tags:    

Similar News