செய்திகள்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 92 அடியை தொட்டது

Published On 2018-07-18 10:04 GMT   |   Update On 2018-07-18 10:04 GMT
அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும்.

இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த மாதம் தொடங்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடி 10 ஆயிரத்து 719 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News