செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுவர் இடிந்து இளம்பெண் பலி- கணவர் உயிருக்கு போராட்டம்

Published On 2018-06-29 07:24 GMT   |   Update On 2018-06-29 07:24 GMT
ஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியானார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி கீழத் தெருவைச் சேர்ந்தவர் உமையூரான் பிள்ளை என்ற கண்ணன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்திரிகா (43). இவர்களது மகள் தேவி 12-ம் வகுப்பும், மகன் சந்தோஷ் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இவர்களது வீடு மண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீடாகும். இந்த வீட்டில் 3 அறைகள் இருந்தன. இந்த வீட்டையொட்டி அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக கண்ணன் வீட்டை ஒட்டி குழிதோண்டப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு கண்ணன், அவரது மனைவி சந்திரிகா ஆகியோர் ஒரு அறையிலும், மகன், மகள் மற்றொரு அறையிலும் படுத்து உறங்கினர். நள்ளிரவு 11.30 மணிக்கு குழிதோண்டி போடப்பட்டு இருந்த இடத்தையொட்டி உள்ள அறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் உள்பக்கமாக சாய்ந்து வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், சந்திரிகா ஆகியோரை அமுக்கியது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

சுவர் இடிந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகனும், மகளும் விழித்து ஓடி வந்தனர். தாயும், தந்தையும் உயிருக்கு போராடுவதை பார்த்து சத்தம் போட்டு அலறினார்கள். அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி கண்ணனையும், சந்திரிகாவையும் மீட்டனர். அவர்களை அருகில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சந்திரிகா பரிதாபமாக இறந்தார்.

கண்ணன் கவலைக் கிடமாக உள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கண்ணனின் மகனும், மகளும் மற்றொரு அறையில் தூங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்ணன் வீட்டையொட்டி புதிதாக வீடு கட்டும்போதே அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு வீடு கட்ட குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழியே சந்திரிகாவின் உயிரை பலிவாங்கி விட்டது.

இந்த சம்பவம் ஆரல்வாய் மொழி மற்றும் தாழக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News