செய்திகள்

கல்லூரி பேராசிரியர்களுக்கு 24 சதவீதம் சம்பளம் உயர்வு

Published On 2018-06-28 10:40 GMT   |   Update On 2018-06-28 10:40 GMT
7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையின்படி கல்லூரி பேராசிரியர்களின் சம்பளத்தை 24 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் கணிசமான அளவுக்கு உயர உள்ளது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையின் பேரில் பேராசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சம்பள உயர்வுக்கான அறிவிப்பையும் அரசாணையையும் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு எடுத்துள்ள முடிவின்படி அரசு கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் சம்பளம் 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயரும் என்று தெரிய வந்துள்ளது.

தற்போது பேராசிரியர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம் பெற்று வருகிறார்கள். சம்பள உயர்வுக்கு பிறகு அவர்கள் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.2.2 லட்சம் வரை பெறுவார்கள்.

துணை பேராசிரியர்கள் சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயரும்.

இந்த சம்பள உயர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரியர்ஸ் தொகை கிடைக்குமா? என்று தெரியவில்லை.

அரசு கல்லூரி பேராசிரியர்கள் சம்பள உயர்வு அமலுக்கு வந்தால் அது எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் மாத சம்பளத்தை விட 30 சதவீதம் அதிகமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News