செய்திகள்

உத்தமபாளையம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றையானை

Published On 2018-06-02 15:24 IST   |   Update On 2018-06-02 15:24:00 IST
உத்தமபாளையம் அருகே விளை நிலங்களை ஒற்றையானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரம் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு, கரும்பு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரளாவில் இருந்து வந்த மக்னா என்று அழைக்கப்படும் ஒற்றையானை சுற்றிதிரிகிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் விவசாயிகளின் மோட்டார் அறைகளையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இரவு காவலுக்காக சென்ற விவசாயி மற்றும் அவரது மகன் ஒற்றையானை தாக்கி பரிதாபமாக பலியானார்கள்.

தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசி வருகிறது. மற்ற பயிர்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது.

இதனால் மக்னா யானையை விரட்ட கும்கி யானை மூலம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் இதனை வலியுறுத்தினர்.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இருந்த போதும் ஒற்றையானையை இப்பகுதியில் இருந்து விரட்டினால் மட்டுமே விவசாயிகள் நிம்மதியாக சென்று வர முடியும்.

Tags:    

Similar News