செய்திகள்

தண்ணீர் என நினைத்து மண்எண்ணெயை குடித்த பெண் குழந்தை உயிரிழப்பு

Published On 2018-03-30 15:53 IST   |   Update On 2018-03-30 15:53:00 IST
ஈரோடு கருங்கல் பாளையத்தில் தண்ணீர் என நினைத்து மண்எண்ணெயை குடித்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு தர்ணிகா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

நேற்று மதியம் மீனா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பாட்டிலில் மண்எண்ணெயை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதை அப்படியே கீழே வைத்து சென்று விட்டார்.

வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தர்ணிகா பாட்டில் இருந்த மண்எண்ணெயை தண்ணீர் என நினைத்து தவறுதலாக எடுத்து குடித்து விட்டாள்.

பின்னர் சிறிது நேரத்தில் தர்ணிகா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தர்ணிகாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தர்ணிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தர்ணிகா பரிதாபமாக இறந்தாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் அழுதது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News