செய்திகள்

வனப்பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை யானை தூக்கி வீசி மிதித்து கொன்றது

Published On 2018-03-28 10:22 IST   |   Update On 2018-03-28 10:23:00 IST
வனப்பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை யானை தூக்கி வீசி மிதித்து கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கேர்மாளம் அடுத்த கூத்தான புரத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 30). இவரது மனைவி ராஜம்மாள் என்கிற ராஜாமணி (26). இவர்களுக்கு அபி ( 8), சிந்து (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் கார்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள அங்க குருவன் தொட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு நேற்று மாலை புறப்பட்டனர்.

ஊருக்கு செல்லும் பஸ்சை இவர்களால் பிடிக்க முடியவில்லை. அந்த பஸ் முன் கூட்டியே புறப்பட்டு சென்று விட்டது.

இதனால் அவர்கள் தங்கள் கிராமத்துக்கு போக காட்டுப்பகுதியில் உள்ள குறுக்கு வழியில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கேர்மாளம் அருகே பைலூர் காளையங்கோவில் அருகே வந்தபோது புதர் மறைவில் இருந்து ஒரு யானை வெளியே வந்தது. யானையை கண்டதும் அவர்கள் நடுங்கினர். பிறகு ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினர். சிவண்ணா தனது 2 குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஓட.. பின்னால் அவரது மனைவி ராஜம்மாளும் ஓடினார்.

ஆனால் யானை அவர்களை விரட்டியது. இதில் அந்த யானை ராஜம்மாளை துதிக்கையால் தூக்கி வீசியது. பிறகு மிதித்தது.

இதில் படுகாயம் அடைந்து அவர் அலறி துடித்தார். அதன் பிறகு அந்த யானை அடர்ந்த காட்டுக்குள் புகுந்தது.

ஊர் பகுதிக்குள் ஓடிய சிவண்ணா பொதுமக்களிடம் வி‌ஷயத்தை சொல்ல அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும் பொதுமக்களும் விரைந்து சென்றனர். அங்கு எழுந்திருக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜம்மாளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று பிரேத விசாரணை நடக்கிறது.

அவரது உடலை பார்த்து கணவர் சிவண்ணாவும் குழந்தைகளும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

யானை தாக்கி பலியான ராஜம்மாள் குடும்பத்துக்கு வனத்துறையினர் சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. #tamilnews

Similar News