செய்திகள்

கொத்தடிமைகளை மீட்டு அரசு உதவிகள் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2018-02-24 06:56 GMT   |   Update On 2018-02-24 06:56 GMT
தொழிற்சாலைகளில் சிக்கியுள்ள கொத்தடிமைகளை மீட்டு அரசு உதவிகள் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1976 -ம் ஆண்டு பிப்ரவரி 9 -ம் தேதி அன்று கொத்தடிமை தொழில்முறை சட்டம் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் கொத்தடிமைகளாக பல்வேறு இடங்களில், பல்வேறு தொழில்களில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல அவ்வாறு மீட்கப்பட்டவர்களின் மறு வாழ்வுக்கான நலத்திட்ட உதவிகளையும் மேற்கொண்டால் தான் மீட்கப்பட்டவர்கள் பயனடைவார்கள்.

பல்வேறு தொழிற்சாலைகளில் இப்போதும் சிக்குண்டு, தவிக்கின்ற கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பதற்கு தொடர்புடைய அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும், ஆணைகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீடுகளிலும், பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களிலும், தொழிற் சாலைகளிலும் அடிமைகளாக வேலை செய்கின்ற, வாழ்கின்ற அனைவரையும் மீட்க வேண்டும். இப்படி மாநிலம் முழுவதும் மீட்கப்படுவோருக்கு சலுகைகள், உதவிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு தமிழக அரசு வழி வகை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews

Tags:    

Similar News