செய்திகள்
வேப்பூர் அருகே விபத்து: வாலிபர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிநெசலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55) கட்டிடத்தொழிலாளி. இவரது மகன் சங்கர்(30). இவர் வேப்பூரில் உள்ள மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை கந்தசாமி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சங்கர் ஓட்டிச்சென்றார்.
சேலம்-கடலூர் சாலையில் உள்ள வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நெல் அறுவடை எந்திரம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கந்தசாமி படுகாயம் அடைந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews