செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி பலி

Published On 2017-12-12 07:23 GMT   |   Update On 2017-12-12 07:23 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவாலக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). தொழிலாளி. இவருக்கு கடந்த 2 வாரத்துக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அவரை, சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் ராஜேந்திரனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து டாக்டர்கள், அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ராஜேந்திரனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், ஆனந்தராஜ், அரவிந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

டெங்கு காய்ச்சலுக்கு ராஜேந்திரன் பலியானதையடுத்து சுகாதாரத்துறையினர் காவாலக்குடியில் முகாமிட்டனர். அந்த பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களையும் பரிசோதனை செய்தனர்.

மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொசு மருந்து அடித்தனர். ஆங்காங்கே தேங்கி நின்ற கழிவுநீரையும் அகற்றினர்.
Tags:    

Similar News