செய்திகள்

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை-கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2017-11-30 15:53 IST   |   Update On 2017-11-30 15:53:00 IST
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:

வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று இரவும் அவ்வப்போது கனமழையாக பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூரில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் தேவனாம்பட்டினம், தாழங்குடா, ராசாப் பேட்டை, சித்திரைப்பேட்டை, துறைமுகம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதுசுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது கனமழையும் பெய்தது.

பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலை 4.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் அந்த பகுதியில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

உளுந்தூர்பேட்டை அதன்சுற்றுவட்டார பகுதிகளான ஆசனூர், பாலி, சாத்தனூர், காட்டுநெமிலி, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

கடல் அலை சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மாவட்டத்தின் பிறபகுதிகளான விக்கிரவாண்டி, அரசூர், சங்கராபுரம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Similar News