செய்திகள்

விருத்தாசலம் அருகே அங்காளம்மன் கோவிலில் வெள்ளி கிரீடம் கொள்ளை

Published On 2017-10-28 17:19 IST   |   Update On 2017-10-28 17:19:00 IST
விருத்தாசலம் அருகே அங்காளம்மன் கோவிலில் வெள்ளி கிரீடம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடந்து வருவது வழக்கம்.

கோவிலின் பூசாரியாக செல்வராஜ் (வயது 60) என்பவர் உள்ளார். நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலின் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இரவில் மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது.

இதைத்தொடர்ந்து கொள்ளையர்கள் கோவிலின் கருவறைக்கு புகுந்து அங்கிருந்திருந்த வெள்ளி கிரீடத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை கோவில் பூசாரி செல்வராஜ் கோவிலை திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் வெள்ளி கிரீடம் கொள்ளை போய் இருந்தது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இது குறித்து கம்மாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News