செய்திகள்

மத்திய அரசு, விஜயை மறைமுகமாக மிரட்டுகிறது: சீமான்

Published On 2017-10-24 13:24 IST   |   Update On 2017-10-24 13:24:00 IST
விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மத்திய அரசு விஜயை மறைமுகமாக மிரட்டி வருகிறது என சீமான் கூறினார்.
ராமநாதபுரம்:

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டு இன்று விடுதலை செய்தது.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண் மீதும், மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள நேசத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. கர்நாடகாவில் உலகத்தில் உள்ள அத்தனை மொழிப் படங்களும் வெளியாகிறது. ஆனால் தமிழ் மண்ணில் பிறந்த காரணத்தால் விஜயின் மெர்சல் படத்தை திரையிட கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 1¼ கோடி தமிழர்கள் உள்ள அங்கு மெர்சல் படம் திரையிட முடியவில்லை. இதற்கு தற்போது வரை யாரும் வாய் திறக்கவில்லை.


உண்மையான நிலவரங்கள் குறித்த கருத்தை திரைப்படத்தில் தெரிவித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து உள்ளது. தமிழகத்தில் இதுபோல் பல லட்சம் குடும்பங்கள் கந்து வட்டி கொடுமையால் மனதளவில் எரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேச துரோகி, வருமான வரித்துறை நடவடிக்கை என்று மத்திய அரசு மிரட்டி வருகிறது. ஜி.எஸ்.டி. வரியால் 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. 60 சதவீத பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் பிரதமர் மோடி வாய் திறக்காமல் உள்ளார். ஆனால் விஜயின் மெர்சல் படத்தை எதிர்த்து பா.ஜ.க. தலைவர்கள் ஆவேசமாக பேசி வருகிறார்கள். விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மத்திய அரசு விஜயை மறைமுகமாக மிரட்டி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எதற்காக தேவை? அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு என்ன செய்யும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News