ஈரோடு: துணி துவைக்க சென்றவர் காவிரி ஆற்றில் தவறி விழுந்து பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர், பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42). இவரது மனைவி மகேஸ்வரி (45).
சம்பவத்தன்று புண்ணியமூர்த்தி துணிகளை துவைக்க அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி கணவரை துணிதுவைக்க சென்ற காவிரி ஆறு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கோண வாய்க்கால், லட்சுமிநகர் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் புண்ணியமூர்த்தி பிணமாக கிடந்தார். புண்ணிய மூர்த்தி துணி துவைக்கும் போது தவறி ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புண்ணியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.