தமிழகத்தில் உள்ள தலைமை நூலகங்கள் சிவில் சர்வீஸ் பயிற்சிமையமாக செயல்படும்: செங்கோட்டையன்
காஞ்சீபுரம்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, முன்னாள் எம்.எல். ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், கே.யூ.எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைமை நூலகங்களும் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உண்டான சிறப்பு பயிற்சிகள் செயல்படும். மாவட்ட நூலகங்களில் பல்வேறு அறியவகை நூல்களும், நடப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதால் அங்கு பயிற்சியில் ஈடுபட்டால் மாணவர்களின் திறன் வெளிப்படும்.
தமிழக மாணவர்களின் கல்வி சி.பி.எஸ்.இ.க்கு இணையாகவும், வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக வருங்காலத்தில் தமிழக கல்விதுறை செயல்படும்.
வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பரிந்துரைகள் அதிக அளவில் வரும். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளி கல்வித்துறை மேலும் பல நல்ல திட்டங்களை ஆலோசித்து வருகிறது.
தமிழ்நாட்டை பொருத்த வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கல்விக் கொள்கை சிறப்பாக இருந்தது. 1 முதல் 3-ஆம் வகுப்பு பள்ளி குழந்தைகளின் கல்வித் திறன் சிறப்பாக உள்ளது. எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது இதுகுறித்து
அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தி நீதி மன்றத்தில் கருத்துக்களை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட் டையன் காஞ்சீபுரம் காமாட் சியம்மன் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி பூஜை விழாவில் கலந்து கொண்டார். பிறகு காமாட்சியம்மனை பயபக்தியுடன் தரிசித்தார். அவருக்கு கோயில் சார்பில் பொன்னாடை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.