செய்திகள்

தாம்பரம் தாலுகா அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: 80-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2017-09-28 02:32 GMT   |   Update On 2017-09-28 02:33 GMT
தாம்பரம் தாலுகா அலுவலகம் எதிரே விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் குடிமனைப்பட்டா வழங்காமல் இருப்பது மற்றும் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டு மண்ணுரான்குளம் பழங்குடி இன இருளர் மக்களின் 14 குடும்பங்களை இடித்து தரைமட்டமாக்கிய நகராட்சியை கண்டித்தும், திருநீர்மலை பேரூராட்சி திருமங்கையாழ்வார்புரத்தில் பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும், அதே பகுதியில் அனைவருக்கும் குடிமனைப்பட்டா, மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் கூறும்போது, “மேட்டூர் அணை நிரம்பியும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடவில்லை. உடனடியாக தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். பயிர்கள் வாடியதால் அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News