செய்திகள்

பல்லாவரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி அடித்து கொலை: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-09-25 15:37 IST   |   Update On 2017-09-25 15:37:00 IST
பல்லாவரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம்:

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் வசித்து வந்தவர் ராஜேஷ் (வயது 27) ரவுடி. கடந்த 20-ந்தேதி அவர் கூட்டாளி ஒருவருடன் பொழிச்சலூர், சிவசங்கரன்நகர் பகுதியில் சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த நரேஷ், கண்ணன், சதீஷ் ஆகியோர் எதிரே வந்தனர். அவர்களிடம் ராஜேசும், அவனது கூட்டாளியும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம்- செல்போனை பறிக்க முயன்றனர்.

இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நரேஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து கம்பியால் ராஜேசை தாக்கினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அவருடன் வந்த கூட்டாளி தப்பி ஓடிவிட்டான்.

உயிருக்கு போராடிய ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்தார். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நரேஷ், கண்ணனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கொலையுண்ட ராஜேசின் சொந்த ஊர் பழவந்தாங்கல். அவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது. எதிரிகளால் ஆபத்து இருப்பதை உணர்ந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொழிச்சலூரில் குடியேறினார்.

சிறையில் இருந்து 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். உல்லாச செலவுக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டபோது வாலிபர்களின் தற்காப்பு தாக்குதலில் சிக்கி பலியாகி விட்டார்.

Similar News