செய்திகள்

தண்ணீர் லாரிக்கு பின்னால் படுத்து தூங்கிய 2 பேர் உடல் நசுங்கி சாவு: டிரைவர் கைது

Published On 2017-07-24 03:29 GMT   |   Update On 2017-07-24 03:29 GMT
சேலையூர் அருகே, தண்ணீர் லாரிக்கு பின்னால் படுத்து தூங்கிய 2 தொழிலாளிகள், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். லாரியை பின்னோக்கி எடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

தேனியை சேர்ந்த மணிமாறன் (வயது 23), நாமக்கல்லை சேர்ந்த அஜித்குமார்(20). இருவரும் போர்வெல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த சேலையூர் அருகே கோயிலம்சேரியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் போர்வெல் லாரியை நிறுத்தி இருந்தனர்.

அதன் அருகே ஏராளமான தனியார் தண்ணீர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு தண்ணீர் லாரிக்கு பின்புறம் மணிமாறன், அஜித்குமார் இருவரும் தரையில் படுத்து தூங்கினர்.

இவர்கள் இருவரும் லாரிக்கு பின்னால் படுத்து இருப்பதை கவனிக்காமல் நேற்று அதிகாலையில் அந்த தண்ணீர் லாரியை டிரைவர் மணிகண்டன் (30) பின்னோக்கி எடுத்தார். அப்போது கீழே படுத்து இருந்த மணிமாறன், அஜித் குமார் இருவர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் மணிமாறன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இடுப்பு பகுதியில் நசுங்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அஜித்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் அஜித்குமாரும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News