செய்திகள்

பல்லாவரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி

Published On 2017-07-21 13:59 IST   |   Update On 2017-07-21 13:59:00 IST
பல்லாவரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலியானார். மேலும் 2 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அண்ணா பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரோகித் (17). இவர் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

காய்ச்சலின் தீவிரம் அதிகமாகவே இவர் குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

அதை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக் கொண்டு பெற்றோர் தங்களது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்தனர்.

மாணவர் ரோகித் பலியான நிலையில் அனகா புத்தூர் அண்ணா பிரதான சாலை 3-வது தெருவைச் சேர்ந்த 2 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலையன்பன் (4), காவியா (8) ஆகிய 2 பேர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனகாபுத்தூரில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் உள்ளது. எனவே அவற்றை அகற்றியும், கால்வாய்களை தூர்வாரியும் பிளீச்சிங் பவுடர் தூவியும் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். இங்கு மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News