செய்திகள்
கூடுவாஞ்சேரியில் குண்டர் சட்டத்துக்கு பயந்து ரவுடி தற்கொலை
கூடுவாஞ்சேரியில் குண்டர் சட்டத்துக்கு பயந்து ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரியை அடுத்த சீனிவாசபுரம் கே.கே. புரத்தை சேர்ந்தவர் ரகு (வயது 27). இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு அருகே கூட்டாளிகளுடன் சேர்ந்து சதீஷ் என்பவரை அவர் வெட்டி கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் கைதான ரகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் ரகுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் ரகு கவலை அடைந்தார். குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும் என்று நண்பர்களிடம் புலம்பினார்.
நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.