செய்திகள்

பெரம்பலூரில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது: ஆந்திர அதிகாரி பாராட்டு

Published On 2017-06-20 21:42 IST   |   Update On 2017-06-20 21:42:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று ஆந்திர மாநில அதிகாரி பாராட்டி உள்ளார்.
பெரம்பலூர்:

தமிழ்நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளர்களுக்கு ஆன்லைனில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் மூலம் ஊதியம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள ஆந்திர மாநில அலுவலர்கள் தமிழகம் வந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் ஊதியம் ஏற்றும் பணிகள் தவிர பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்படுவதால் பெரம்பலூர் மாவட்டத்தை பரிந்துரை செய்ததன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அண்மையில் ஆந்திர மாநில ஊரகவளர்ச்சித்துறை துணை ஆணையர் சுனிதா தலைமையில் 6 பேர் வருகை தந்தனர்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அண்மையில் வந்த ஆந்திர மாநில ஊரக வளர்ச்சி முகமை துணை ஆணையர் சுனிதா தலைமையிலான குழுவினர் எசனை, அரசலூர், அன்னமங்கலம், வெங்கலம், கிருஷ்ணாபுரம், வாலிகண்டபுரம், அனுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பார்வையிட்டனர்.

ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பரண்மேல் ஆடு வளர்த்தல், மாடு கொட்டகை அமைத்தல், காளாண் வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், பெருந்திரளாக மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மாட்டு கொட்டகை அமைக்க அரசு திட்டத்தின் மூலம் கொட்டகை மட்டும் அமைத்து தரப்படுகின்றது.

ஆனால் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டுக்கொட்டகையில் அருகில் அமைக்க மழைத்தூவுவான் கருவியும், பால் கரக்கும் கருவியும் வழங்கப்படுகின்றது. மழைத்தூவுவான் கருவியின் மூலம் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகளை காக்கும் வகையில் நீரத் தெளிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம் மற்றும் எளம்பலூரில் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதைப்போல மண்புழு உரம் தயாரித்தல், காளாண் தயாரித்தல், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்தெடுத்தல், பெருந்திரள் மரக்கன்றுகள் வளர்த்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் என அரசு மானிய உதவியுடன் பல்வேறு முன் மாதிரித் திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எசனை பகுதியில் ரூ.87,500 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காளான் உற்பத்தி மையம், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் வெங்காயக் கொட்டகை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அன்ன மங்கலம் பகுதியில் ரூ.99,900 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டை, ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகள்,

ரூ.21.80 லட்சம் அமைக்கப்பட்ட மதிப்பீட்டில் நாற்றங்கால், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிணறு ரூ.1.98 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட பரன் மேல் ஆடுகள் கொட்டகை, ரூ.1.98 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாட்டுக் கொட்டகை, ரூ.90,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மண்புழு உரம் தயாரித்தல், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தனூர் மற்றும் மேலமாத்தூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட ரூ.15.55 மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல், வேப்ர் ஊராட்சி ஒன்றியத்தில் வரகூர் பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவைகளை ஆந்திர மாநில ஊரகவளர்ச்சி முகமை அலுவலர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.

இத்திட்டங்களை முழுவதும் பார்வையிட்ட ஆந்திர மாநில ஊரகவளர்ச்சி முகமை உதவி ஆணையர் சுனிதா பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்மாதிரி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறித்த தகவல்கள் முழுவதும் ஆந்திர மாநில ஊரக வளர்ச்சித் துறையிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் கல்யாணி, தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப் பாளர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், சேகர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News