செய்திகள்

அரியலூர் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி: 50 பேர் படுகாயம்

Published On 2017-06-19 22:30 IST   |   Update On 2017-06-19 22:30:00 IST
அரியலூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாதாகோவில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை மந்திரிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 300 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, காளை முட்டியதில் திருச்சி மாவட்டம் விரகாலூரை சேர்ந்த ஜான்கென்னடி(42) என்பவர் படுகாயமடைந்து திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், காளைகள் முட்டியதில் இருங்களுர் சேவியர்(55), அகழங்கநல்லூர் முத்தமிழ்செல்வன்(26), அன்னிமங்கலம் மணிகண்டன்(26), திருமழபாடி செல்வகுமார்(42) உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Similar News