செய்திகள்

கொடைக்கானலில் பெய்த சாரல் மழை

Published On 2017-06-01 11:04 GMT   |   Update On 2017-06-01 11:05 GMT
கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

பருவமழை பொய்த்துப் போனதால் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடும் வறட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் குடிநீருக்காக சாலை மறியல் போராட்டத்தில் கூட ஈடுபட்டனர். விவசாயிகளும், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டது.

கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் போதுமானதாக இல்லை. கேரளாவில் கடந்த 30-ந் தேதி பருவ மழை தொடங்கியது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சராரி அளவு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொடை க்கானல் பஸ்நிலையம், மூஞ்சிக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கி சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை மழை பெய்ததையொட்டி நிலங்களை உழுது உருளைக்கிழங்கு, பீன்ஸ், சவ்சவ், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்திருந்தனர்.

தற்போது பெய்யும் இந்த சாரல் மழை தொடர்ந்து பெய்தால் பயிர்களை ஓரளவு காப்பற்ற முடியும். மேலும் கொடைக்கானல் நகருக்கு நீர் வழங்கும் ஏரிகளிலும் ஓரளவு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே மழை தொடர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News