செய்திகள்

சோழிங்கநல்லூர் அருகே மதுக்கடைக்கு எதிராக சிறுவர்கள் போராட்டம்

Published On 2017-04-24 07:28 GMT   |   Update On 2017-04-24 07:28 GMT
சோழிங்கநல்லூர் அருகே மதுக்கடைக்கு எதிராக சிறுவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவான்மியூர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இப்போது மூடப்பட்ட கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பிரதான சாலையில் புதிய மதுக்கடை திறக்க கட்டுமான பணி நடக்கிறது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுக் கடைக்கு எதிராக பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் உள்பட சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மதுக்கடைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சு நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Similar News