செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-04-21 15:23 IST   |   Update On 2017-04-21 15:24:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நெமிலியை சேர்ந்தவர் தீபன்சக்கரவர்த்தி. விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் பொறுப்பாளர்.

நேற்று இரவு அவர், அதே பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றி மினி லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தார். உடன் அவரது நண்பர்களும் இருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மினி லாரியை ஓரமாக நிறுத்தும்படி கூறி தீபன் சக்கரவர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் அரிவாளால் தீபன் சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீபன் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முன்விரோதத்தில் திட்டமிட்டு அவரை தீர்த்துக்கட்ட மர்ம கும்பல் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News