செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை

Published On 2017-04-11 05:47 GMT   |   Update On 2017-04-11 08:37 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை:

தமிழக சுகாதாரதுறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் எழும்பூர் விடுதியில் இருந்து ரூ.89 கோடி அளவில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். மேலும் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதலானது.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி சுமார் 4½ மணி நேரம் விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் திருப்தி தராததால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.



அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளாக இந்த குவாரியை நடத்தி வருகிறார். அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஜல்லி கற்களாக அனுப்பப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் இந்த குவாரியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்து சென்றனர். அதில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரிய வந்தது. அதுபற்றி மத்திய பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதன் அடிப்படையில் இன்றைய சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக டெல்லியில் இருந்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக குவாரிக்குள் நுழைந்தனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர்.



குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிமவளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக் கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? என சோதனை நடத்தி வருகிறார்கள்.

மதியம் 1.30 மணியையும் கடந்து சோதனை நீடித்து வருகிறது.

கற்கள் வெட்டி எடுக்கப்படும் முறைகள், கற்களின் அளவு, இதுவரை எவ்வளவு ஆழம் வரை கற்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நுழைவு வாயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் குவாரி உள்ளது.

மத்திய அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையையொட்டி குவாரியின் நுழைவு வாயிலில் 10-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருப்பதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Similar News