செய்திகள்
நாகை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
நாகை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள சம்பாதோட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (56). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், ரங்கையன் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
அவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்து 8 நாட்டின் கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் படகு நிலை குலைந்தது.
இதனால் படகில் இருந்த மாரியப்பன்,ரங்கையன் ஆகிய இருவரும் தடுமாறி கடலில் விழுந்தனர்.
அப்போது வேறு படகில் வந்தவர்கள் கடலில் குதித்து இருவரையும் மீட்டு படகில் ஏற்றினர். ஆனால் மாரியப்பன் இறந்து விட்டார். காயம் அடைந்த ரங்கையன் கரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.