செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்புக்கு துணை ராணுவம்: கமி‌ஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாடு அறை திறப்பு

Published On 2017-03-18 09:48 GMT   |   Update On 2017-03-18 09:48 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்புக்கு துணை ராணுவம் கமி‌ஷனர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெறுவதையொட்டி இங்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீசாரை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் துணை ராணுவ படையினர் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

தற்போது பறக்கும் படையினருடன் போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். துணை ராணுவ படையினர் வருகை தந்த பின்னர் போலீசார் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். துணை ராணுவ பாதுகாப்புடன் பறக்கும் படை சோதனை நடைபெறும்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை கமி‌ஷனர் பாலசுப்பிர மணியன் அதற்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான பணிகளில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Similar News