செய்திகள்

வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்: 200 பேர் கைது

Published On 2017-03-07 17:29 IST   |   Update On 2017-03-07 17:29:00 IST
வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், ஒன்றியச் செயலாளர் சிவகுருபாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வீரப்பன் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

டெல்டா மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று அறிவித்தும் இன்று வரை வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்தும், வறட்சி நிவாரணம் வழங்குவதில் பெரு, குறு விவசாயி என பாரபட்சம் காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், அருணாசலம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தங்கசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்.

Similar News