செய்திகள்

நெடுவாசலில் தீவிரம் அடையும் போராட்டம்

Published On 2017-03-06 13:30 IST   |   Update On 2017-03-06 13:30:00 IST
நெடுவாசலில் தீவிரம் அடையும் போராட்டத்தை கைவிடவேண்டுமானால் பேச்சுவார்த்தை தேவையில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதால் தான் முடியும் என்று போராட்டக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த மாதம் 15-ந்தேதி அனுமதி வழங்கியது.



இதனை எதிர்த்து நெடுவாசல் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் அருகிலுள்ள வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி, வடகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது.

இதற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததோடு, நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தவித பாதிப்பும் வராது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்த நெடுவாசல் கிராமத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே அரசியல் கட்சியினரும் ஆதரவளித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்தனர்.

போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக கலெக்டர் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. கோட்டைக்காடு கிராம மக்கள் மட்டும் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் மதுரையில் நடந்த பேச்சுவார்த்தையில் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த 30 பேர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து செய்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நெடுவாசலில் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள வடகாடு கிராமத்திலும் பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.



இதில் கலந்துகொள்பவர்களுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மூட்டை, மூட்டையாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வந்து குவிக்கப்பட்டுள்ளன.

விடுமுறை தினமான நேற்று திரைத்துறையை சேர்ந்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், சண்முகம், குட்டிப்புலி சினிமா நடிகர் ராஜசிம்மன் உள்ளிட்டோர் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.

அதேபோல் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவும் நெடுவாசல் வந்து வருகிற 11-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை ஏற்க கிராமத்தினர் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே போராட்டக் குழுவை சேர்ந்த சிங்காரம் கூறுகையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தவாறு வருகிற 9-ந்தேதி பாராளுமன்றம் தொடங்குகிறது. 10 அல்லது 12-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார். நாங்கள் பிரதமரை சந்தித்தாலும் எங்களுக்கு திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.

இருந்தாலும் எங்கள் குறைகளை முறையிட கிடைத்த வாய்ப்பாக கருதி பிரதமர் மோடியை சந்திக்க போராட்டக்குழுவை சேர்ந்த யாரெல்லாம் செல்வது என்பது குறித்து 100 கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அறிவிப்போம். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றார்.

நாளுக்கு நாள் தீவிரம் அடையும் போராட்டத்தை கைவிடவேண்டுமானால் பேச்சுவார்த்தை தேவையில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதால் தான் முடியும் என்று போராட்டக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Similar News