செய்திகள்
எச்.ராஜா போராட்ட களத்தில் இருந்து வெளியேறியதை படத்தில் காணலாம்

நெடுவாசல் போராட்ட களத்தில் எச்.ராஜாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2017-03-06 11:04 IST   |   Update On 2017-03-06 11:04:00 IST
நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு அவர் நெடுவாசல் போராட்டக்களத்திற்கு திடீரென வந்தார். அப்போது பொது மக்கள் எழுந்து நின்று எச். ராஜாவை முற்றுகையிட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி எச்.ராஜாவை போராட்டக்களத்தில் அமர வைத்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் எச்.ராஜா வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் எச். ராஜா பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு முன்பாகவே தடை அமலில் இருக்கும் போது நான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட்டேன். இதனால் தமிழக அரசு என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜாவுக்கு எதிராக பொதுமக்கள் கோ‌ஷமிட்ட காட்சி.

எனது சொந்த ஊரான கண்டனூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உங்களுடைய உணர்வை புரிந்தவன். 18 நாள் போராட்டத்துக்கு இடையில் மக்கள் விரும்பாவிட்டால் இந்த திட்டம் வராது என்று அறிக்கை விட்டேன். முதல்வர் அனுமதி கொடுக்காததால் இத்திட்டத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது, திணிக்காது.

தமிழகத்தில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுகிறது. எங்கேயும் எதிர்ப்பு வரவில்லை. மக்கள் வெறுத்தால் இத்திட்டம் வராது என்றார். அப்போது பொதுமக்கள் வேண்டாம், வேண்டாம் என்றனர். மேலும் அங்கிருந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு அமர்ந்து கருப்புக்கொடி காட்டி எச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எச். ராஜா போராட்ட மையத்தில் இருந்து நுழைவு வாயிலை தவிர்த்து வேறு வழியாக வெளியேறினார்.

Similar News