வேதாரண்யம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி 5 பேர் காயம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65). இவர் குரவப்புலத்திற்கு கூலி வேலைக்கு சென்று சவுக்கு மரம் வெட்டிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பினார்.
குரவப்புலம் கடைவீதியில் சென்றபோது வேதாரண்யத்திலிருந்து ராஜப்பா மகன் ஹரிகரன் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சுப்பிரமணியன் படுகாயமடைந்தார். அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (60). இவர் வேதாரண்யம்- கோடியக்கரை சாலையில் அகஸ்தியன்பள்ளி அய்யனார் கோவில் வளைவில் இருந்து அன்னதான கூடத்திற்கு சாப்பிட நடந்து சென்றபோது அகஸ்தியன்பள்ளி சக்திவேல் (26) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயமடைந்த அண்ணாதுரையை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேதாரண்யத்தை சேர்ந்த சபரிநாதனும் (42), அவரது நண்பர் கோவிந்தனும் தோப்புத்துறை சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினர். குருகுலம் எதிரே வந்தபோது தோப்புத்துறையை சேர்ந்த தனுஷ்கோடி (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர்.
இவர்களை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.