செய்திகள்

நெடுவாசல் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் திடீர் ஆதரவு

Published On 2017-03-03 11:16 IST   |   Update On 2017-03-03 11:16:00 IST
நெடுவாசல் போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராம கிருஷ்ணன், முத்தரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தி.மு.க.வும் இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. அக்கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், பெரியண்ணன் அரசு ஆகியோர் நெடுவாசலுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நெடுவாசல் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் பயணமாக திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதில் நீட் தேர்வு பற்றிய கோரிக்கை இல்லை. ஆனால் நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைத்ததாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் இன்று போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். நெடுவாசல் மக்களுக்கு தமிழக அரசு நம்பிக்கை இல்லை.


உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்யும்.அதற்கான நாட்கள் இன்னும் உள்ளது. பதவியை தக்க வைக்க முயலும் அமைச்சர்களுக்கு மக்களை பற்றிய அக்கறையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் காரில் நெடுவாசல் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

நெடுவாசல் போராட்டத்தில் தினமும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் எப்போது பங்கேற்பார் என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அவர் திடீரென வந்து போராட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Similar News