செய்திகள்

நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று கலெக்டரை சந்திக்கிறார்கள்

Published On 2017-03-03 07:27 IST   |   Update On 2017-03-03 11:49:00 IST
நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று கலெக்டரை சந்திக்கிறார்கள். அதன் பின்னரே போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என்பது தெரியவரும்.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 16-ந்தேதி முதல் போராட் டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் சென்னையில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது தமிழகத்தில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.


இந்த நிலையில் முதல்- அமைச்சரை சந்தித்த நெடுவாசல் போராட்ட குழு பிரதிநிதிகள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று கிராம தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இன்று(வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசை சந்தித்து நெடுவாசல் போராட்டம் குறித்து பேசுவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை 9 மணிக்கு கலெக்டரை சந்திக்கும் போராட்டகுழு பிரதிநிதிகள் அதன் பின்னர் நெடுவாசல் செல்கிறார்கள். அங்கு போராட்ட களத்தில் தங்களது முடிவை அறிவிக்க உள்ளனர். இன்று காலை 11 மணி அல்லது 12 மணி அளவில் அவர்கள் தங்களது முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என அப்போது தெரியவரும்.


மேலும் இந்த போராட்டத்தை முடிக்கும் போது மிகப்பெரிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் இன்று கலெக்டரிடம் அனுமதி கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ? நெடுவாசல் போராட்ட களத்துக்கு இன்று விடை கிடைக்கும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. 

Similar News