செய்திகள்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-02 17:59 IST   |   Update On 2017-03-02 17:59:00 IST
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை வேதாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ளது என்று கூறி அகற்றுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியினர், தலித் கூட்டமைப்பினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகை முன்னாள் எம்.எல்.ஏ மாலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் தலித் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் செல்வபெருந்தகை பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றக்கூடாது என தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாற்றுக் கொள்கையை முன் வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு, மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார். நீலமேகன் வரவேற்றார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கருப்பையா, ஜெகநாதன், மாசிலாமணி, சேகர், ஆதிநாராயணன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை ஆகிய இடங்களிலும் தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது.

Similar News