மாணவர்கள் மோதல் எதிரொலி: சட்ட கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை
காலாப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் அமைந்துள்ள அரசு சட்ட கல்லூரியில் நேற்று முன்தினம் ராக்கிங் பிரச்சினை காரணமாக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4-ம் ஆண்டு மாணவர்கள் வசந்தரராஜா, அரிகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி 4-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க கல்லூரி அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சட்டக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை இருந்ததால் சட்ட கல்லூரிக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் அறிவித்துள்ளார்.