செய்திகள்

திருப்புல்லாணியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்ய கோரிக்கை

Published On 2017-01-16 06:01 GMT   |   Update On 2017-01-16 06:01 GMT
திருப்புல்லாணியில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்:

திருப்புல்லாணி நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து தெருமுனை கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் சோமு, திருவாடானை தொகுதி தலைவர் நவாஸ்கான், ராமநாதபுரம் தலைவர் அசன் அலி, மாவட்டப் பொருளாளர் ரபீக் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மாவட்ட தலைவர் அப்பாஸ் அலி ஆலிம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சிவகங்கை மாவட்ட தலைவர் ரோஸ்லான், எஸ்.டி.டி.யூ. மாநில பொருளாளர் கார்மேகம், மாவட்ட செயலாளர் அனல் அஸ்கர், மாவட்ட உறுப்பினர் பஷீர் ஆகியோர் பேசினர்.

திருப்புல்லாணி வரும் பக்தர்கள் கோவிலுக்கு சிரமமின்றி தரிசனத்திற்கு வந்து செல்லும் வகையில், தூத்துக்குடி-கன்னியாகுமரி வழியாக செல்லும் புறநகர் பஸ்கள் கோவில் வந்துவிட்டு மெயின் ரோட்டின் வழியாக செல்ல வேண்டும்.

ஆதிஜெகநாதர் பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மதுபான கடையால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் பொது மக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், பக்தர்கள் சென்று வருவது சிரமமாக உள்ளது. அந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும்.

தினைக்குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவுக்கு மேல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதை உடனே மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

போதிய மழை இல்லாத காரணத்தால் மக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே லாரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News