செய்திகள்

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2016-12-15 09:57 GMT   |   Update On 2016-12-15 09:57 GMT
கொடைக்கானலில் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.
திண்டுக்கல்:

இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே பனிப்பொழிவு ஆரம்பித்து விட்டது. மலைப்பிரதேசமான கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுகிறது. காலைப்பொழுதிலும் பனி மேகமூட்டம் போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கிறார்கள்.

வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து விட்டதால் மத்தியான வேளையிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. காற்றில் ஈரப்பதம் 83 சதவீதம் உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குளிரில் நடுங்குகிறார்கள்.

இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. குறைந்த அளவிலே வருகிறார்கள். அவர்களும் இரவில் தங்குவதில்லை. பகல் பொழுதில் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்பி விடுகிறார்கள். இதனால் வியாபாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் போதிய மழை இல்லாததால் நீர் தேக்கங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Similar News