செய்திகள்
ககன்தீப் சிங்பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்

நடா புயல் பாதிப்பை தடுக்க கடலூரில் தயார் நிலையில் மீட்புக்குழு: ககன்தீப்சிங்பேடி பேட்டி

Published On 2016-12-01 13:51 IST   |   Update On 2016-12-01 13:51:00 IST
‘நடா’ புயல் பாதிப்பை தடுக்க கடலூரில் மீட்புக்குழு தயார் நிலையில் இருப்பதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரியும் வேளாண்மை துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி கூறினார்.
கடலூர்:

கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ‘நடா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட கண்காணிப்பு குழு அதிகாரியும் வேளாண்மை துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கினார்.

கலெக்டர் ராஜேஷ், ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ககன்தீப்சிங் பேடி தானேபுயல் மற்றும் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ‘நடா’ புயல் கரையை கடப்பதையொட்டி தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் தலைமையில் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் வரவழைக்கப்பட்டு உள்ளது.

மின்சாரத்துறை சார்பில் 2 தலைமை அதிகாரிகள் தலைமையில் 2 ஆயிரம் மின் ஊழியர்கள் மற்றும் 3 ஆயிரம் மின் கம்பங்கள் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எங்கு மரம் முறிந்தாலும் உடனே அதை அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் தேக்கி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், ஓடைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

கடந்த முறை வெள்ளப் பாதிப்பின் போது அதிகம் பாதித்த இடங்களை கண்டறிந்து உடனடியாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி உள்ள படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News