செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2016-12-01 12:41 IST   |   Update On 2016-12-01 12:41:00 IST
வங்கக்கடலில் உருவான நடா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர்:

இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே, 780 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக வலுப்பெற்று உள்ளது. இதற்கு ‘‘நடா’’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று (வியாழக்கிழமை) இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் புதுச்சேரிக்கும்- வேதாரண்யத்துக்கும் இடையே கடலூர் அருகே கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான நடா புயல் காரணமாக நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு மேல் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Similar News