செய்திகள்

விருத்தாசலம் அருகே மழை வேண்டி உருவபொம்மை எரித்து கிராம மக்கள் நூதன வழிபாடு

Published On 2016-11-23 16:49 IST   |   Update On 2016-11-23 16:49:00 IST
விருத்தாசலம் அருகே மழைபொழிய வேண்டி உருவபொம்மை எரித்து கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் தற்போது விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். போதிய அளவில் பருவ மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

மழை பொழிந்தால் தான் உளுந்து பயிர்களை காப்பாற்ற முடியும் என்கிற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதனால் குப்பநத்தம் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மழைபொழிய வேண்டி உருவ பொம்மை செய்தனர். பின்னர் அதனை பாடையில் வைத்து மேளதாளங்கள் முழங்க வருண பகவானை வேண்டி கிராமம் முழுவதும் வீதி, வீதியாக ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.

அதைத்தொடர்ந்து அந்த உருவபொம்மையை சுடுகாட்டில் கொண்டு சென்று பிணத்தை எரிப்பது போன்று எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

Similar News